வடக்கில் மைதானங்கள் இல்லாத நிலைமை! – அரசு அக்கறையின்மை என்று வினோ எம்.பி. குற்றச்சாட்டு.
வடக்கு மாகாணத்தில் மைதானங்கள் இல்லாத நிலைமை உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்திய அவர், மேலும் கூறுகையில்,
“முல்லைத்தீவு மாவட்டத்திலே அரச அதிகாரிகளின் அக்கறையின்மையால் அங்கு மாவட்டத்துக்குரிய ஒரு மைதானத்தைத் தெரிவு செய்து சகல வளங்களையும் கொண்ட மைதானத்தை உருவாக்க முடியாத நிலை உள்ளது. இதேபோன்று மன்னாரிலும் எமில் நகர் கிராமத்திலும் கடந்த காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக தயாசிறி ஜயசேகர இருந்தபோது அங்கு ஒரு விளையாட்டு மைதானம் புனரமைப்புச் செய்து அதனை சகல தரம் கொண்ட மைதானமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஏறக்குறைய 5 கோடியே 9 இலட்சம் ரூபா நிதி கணிப்பிடப்பட்டு ஒன்றரைக் கோடி ரூபா செலவு செய்யப்பட்ட நிலையில் நிதி ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டதால் – ஒப்பந்தக்காரர்கள் விலகியதால் மிகுதி வேலைகள் கைவிடப்பட்டுள்ளன. ஆகவே, அந்த மைதானப் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான நிதியை அரசு விடுவிக்க வேண்டும்.
அதேபோல் வடக்கு மாகாணத்துக்கான ஒரு மைதானம் கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட தொடங்கிய நிலையில் இன்னமும் முற்றுப்பெறவில்லை. அந்த மைதானத்தில் வடக்கு மாகாணத்துக்குரிய விளையாட்டுத் திணைக்களத்தை நிறுவ வேண்டும் என்றும், அந்த மைதானத்தில் 2015ஆம் ஆண்டுக்குரிய தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்றும் 2014ஆம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராகவிருந்த மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரைக்கும் 7, 8 வருடங்கள் கடந்தும் கூட அந்த மைதான அமைப்பு வேலைகள் முடிவுறுத்தப்படவில்லை.
வடக்கு மாகாணத்துக்கென அந்த மைதானம் சகல வசதிகளையும் கொண்டதாக அங்கு உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் வடக்கு மாகாணத்துக்குரிய விளையாட்டுத் திணைக்களம், அதனுடைய செயற்பாடுகளை வடக்கு மாகாணத்துக்கு மத்திய ஸ்தானமாக இருக்கின்ற கிளிநொச்சிக்கு அந்த மைதானத்தோடு இணைந்ததாக கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் அந்த மைதானத்தை எதிர்காலத்தில் முழுமையாக பராமரிப்பதற்கும் ஏனைய விடயங்களுக்கும் வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும்.
அதேவேளை, இன்னொன்றையும் நான் குறிப்பிட வேண்டும். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார். இதில் முன்னாள் போராளிகள், காப்பகங்களில் இருக்கின்ற இளம் மகளிர், அதேபோல் சுகாதாரத் தொண்டர்களுக்கு எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, பாகுபாடுகளுமின்றி இலஞ்ச, ஊழல் இன்றி முன்னுரிமையளிக்கப்படும் எனக் கூறியிருந்தபோதும் அதற்கு நேர்மாறாக அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சுகளில்தான் அந்தத் தெரிவுகள் நடைபெறுகின்றன. உண்மையில் யாருக்கு அந்த வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசியல் ரீதியாகவே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. எனவே, இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்” – என்றார்.