தமிழ்நாட்டில் 10 நாட்களில் 2,000 பேருக்கு சமூகப் பரவல் மூலம் கொரோனா

தமிழகத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 700 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இதில் சுமார் 200 பேர் index cases ஆவர். அதாவது சமூக பரவல் மூலமாக யாரிடமிருந்து வந்தது என தெரியாமல் அவர்களுக்கு நோய் பரவியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் மற்ற 4,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஒரு நாளுக்கு புதிதாக கண்டறியப்படும் 700 கொரோனா நோயாளிகளில் 200 பேர் index cases ஆகும். இது இன்னும் 0 ஆகவில்லை. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டு அவருடன் தொடர்பில் இருந்ததால் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அந்த ஒருவருக்கு வரவில்லை என்றால் ஒன்பது பேருக்கு வந்திருக்காது. மூன்று மாதங்களில் தமிழகத்தில் சிறு சிறு க்ளஸ்டர்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. டெல்டாவினால் ஏற்படும் பாதிப்பு இன்னும் போகவில்லை. இப்போதும் 15 பேர் ஒரு நாளுக்கு சராசரியாக உயிரிழக்கிறார்கள். இதையும் 0 ஆக்கவேண்டும்’ என்றார்.
Index cases அதிகமாக இருக்கிறது என்றால் சமூக பரவல் இன்னமும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று பொருள் என பொது மருத்துவர் அஷ்வின் கருப்பன் தெரிவிக்கிறார். ” 200 index cases பதிவானால் கொரோனா நோய் சமூக பரவலாக இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். கொரோனா பாதிப்பு விலகிவிட்டது என யாரும் நினைக்க வேண்டாம். பொது இடங்களில் முக கவசம் அனைவரும் 100% போடுவதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இதனால் கொரோனா பரவிக் கொண்டே இருக்கிறது ” என்கிறார்.