தேசிய உற்பத்தித்திறன் 2020 : முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இரண்டாமிடம்!
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற 2020க்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முதன்முறையாக இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டி 2020க்கான தொலைநிலை(Zoom) மதிப்பீட்டுத் தேர்வில் களவிஜயத்திற்கான சாதகமான மதிப்பெண்ணைப் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பெற்றநிலையில், கடந்த 25.11.2021ம் திகதியன்று நேரடியான களவிஜயம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திலிருந்து வருகைதந்த மதிப்பீட்டுக் குழுவினர் மாவட்ட செயலகத்திலுள்ள ஒவ்வொரு கிளைகளையும் பார்வையிட்டு மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் இன்று(11) அதிகாலை வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
அதேவேளை கடந்தமுறை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டியில் அரச பிரிவில் விண்ணப்பித்து மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை இந் நிலைக்கு உயர்த்தி பெருமைசேர்த்த முன்னைநாள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உள்ளகக் கணக்காய்வாளரும் உற்பத்தித்திறன் பிரிவின் பிரதம இணைப்பாளர், முன்னைநாள் கணக்காளரும் உற்பத்தித்திறன் பிரிவின் இணைப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள்,உற்பத்தித்திறன் பிரிவினர், உற்பத்தித்திறன் விசேட குழுவினர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் தனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.