ஆப்கன் பெண் எம்.பி.,க்கள் அமைக்க திட்டம்!
ஆப்கனிலிருந்து தப்பிச் சென்று பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள பெண் எம்.பி.,க்கள் பலர், நாடு கடந்த ஆப்கன் பெண்கள் பாராளுமன்றத்தை நிறுவ முனைப்புக் காட்டி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் காபூலை கைப்பற்றினர். ஜனாதிபதி அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பி யு.ஏ.இ.,யில் தஞ்சமடைந்துள்ளார்.
பெண்களின் உரிமைகளுக்கு தலிபான்கள் எதிரானவர்கள் என்பதால் அந்நாட்டிலிருந்த 69 பெண் எம்.பி.,க்களில் 60 பேர் உயிருக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். 9 பேர் உள்நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 69 எம்.பி.,க்களில் 22 பேர் கொண்ட மிகப்பெரிய குழு கிரேக்கத்திலும், அல்பேனியாவில் 9 பேரும், துருக்கியில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ஐரோப்பா நாடுகளில் 12 பேரும் புலம்பெயர்ந்து உள்ளனர். அங்கிருந்த படி ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்காக அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
கனடா 5 ஆயிரம் ஆப்கன் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக கூறியிருப்பதால், எம்.பி.,க்கள் பலர் தாங்கள் இருக்கும் முஸ்லிம் நாடுகளிலிருந்து அங்கு கிளம்பிச் செல்ல விரும்புகின்றனர்.
மேலும் ஆப்கன் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல் குறித்து கவனம் ஈர்ப்பை ஏற்படுத்தி தலிபான்களுக்கு அழுத்தம் தர அவர்கள் புலம்பெயர்ந்த ஆப்கன் பெண்கள் பாராளுமன்றத்தை அமைக்கவும் முயற்சித்து வருகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.