மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தள்ளிப் போகலாம்; காரணம் இதுதான்
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதமாகிறது. கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான மருத்துவ ஆலோசனை குழு வெளியிட்ட அறிக்கையின்படி, மருத்துவ கலந்தாய்வு இன்னும் ஒரு மாதம் கழித்து தான் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக, மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போவதாக விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
மருத்துவச் சேர்க்கைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற, 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தை வரம்பாக வைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பிறகே, கலந்தாய்வு தொடங்கும் என கூறப்படுகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு, குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை முடிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த பிரிவு பங்கீடு இளநிலை மற்றும் முதுகலை சேர்க்கைகளுக்கு பொருந்தும் என்றும் புதிய கொள்கை அகில இந்திய தொகுப்பின் (AIQ) சேர்க்கைக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த விசாரணையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில், “பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய அரசு ஒரு குழுவை உருவாக்கி நான்கு வாரங்களுக்குள் புதிய முடிவை எடுக்கும்” என்று கூறினார்.
வரம்பு மாற்றப்பட்டால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அதிகமான அல்லது குறைவான மாணவர்கள் தகுதி பெறுவார்கள். இதன் மூலம் மாணவர் சேர்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்பதால், இளங்களை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.