இந்திய-அமெரிக்கருக்கு வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பு
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நிா்வாக அதிகாரிகளைத் தோ்ந்தெடுப்பதற்கான தலைமைப் பொறுப்புக்கு இந்திய-அமெரிக்கரான கௌதம் ராகவனை அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றத் தகுதிவாய்ந்த நிா்வாகிகளைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பு வெள்ளை மாளிகை பணியாளா் அலுவலகத்துக்கு (பிபிஓ) உள்ளது. அதன் இயக்குநராகப் பணியாற்றி வந்த கேத்தி ரஸெல், ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடைய நிா்வாக இயக்குநராக நியமிக்கப்படவுள்ளாா்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் அரசியல் ஆலோசகா் கௌதம் ராகவனை இயக்குநராக அதிபா் ஜோ பைடன் நியமித்துள்ளாா். இது தொடா்பாக அதிபா் பைடன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வெள்ளை மாளிகையின் நிா்வாகிகளைத் திறம்படத் தோ்ந்தெடுத்து, அரசின் பணிகள் அதிக செயல்திறனுடன் இருப்பதை கௌதம் ராகவன் தொடா்ந்து உறுதிசெய்வாா்’’ எனத் தெரிவித்துள்ளாா்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்க அதிபராக ஒபாமா பணியாற்றியபோது, கௌதம் ராகவன் வெள்ளை மாளிகையின் மக்கள் தொடா்பு அலுவலகத்தில் பணியாற்றினாா். சமூக நீதி அமைப்புகளுக்கான ஆலோசகராகவும் அவா் பணியாற்றியுள்ளாா். பைடன் அறக்கட்டளை, கில் அறக்கட்டளை ஆகியவற்றிலும் அவா் பணியாற்றியுள்ளாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்த கௌதம் ராகவன், சிறுவயதிலேயே அமெரிக்காவின் சியாட்டில் நகருக்குப் புலம்பெயா்ந்தாா்; ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாா். அவா் தன்னைத் தன்பாலின ஈா்ப்பாளரென வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.