யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு
ஈசா யோகா மையம் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த பதில்களில் நகல் CNN-News ஊடகத்திற்கு கிடைத்துள்ளது. கோயம்புத்தூர், வெள்ளங்கிரி மலையில் உள்ள ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதற்கு தமிழக அரசு தரப்பில், ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் கட்டுமானத்திற்காக வனப் பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ஈசா யோகா மையம் அமைந்துள்ள இடத்தில் எவ்வித யானைகள் வழித்தடமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பல ஏக்கர் பரப்பளவில் ஈசா யோகா மையம் அமைந்துள்ள இடம் தொடர்பாக நிலவிவரும் சந்தேகங்களுக்கு தெளிவு அளிக்கும் விதமாக இந்த ஆர்.டி.ஐ. பதில்கள் அமைந்துள்ளன.
பல ஆண்டுகளாக, யோகா மையம் பாதுகாக்கப்பட்ட வன நிலங்களில் அமைந்துள்ளது என்றும், அதன் கட்டுமானங்களை இப்பகுதியில் கட்டுவதற்கு முன், மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெறவில்லை என்றும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். ஈஷா அறக்கட்டளை இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாத அவதூறு என்று கூறி வருகிறது.