தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. அத்துடன், 15 மற்றும் 16-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.
சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கோடம்பாக்கம், தியாகராயக நகர், வேளச்சேரி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
இதனால், தியாகராய நகர், புளியந்தோப்பு, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. ஆனால், நவம்பர் மாத இறுதியில் பெய்த கனமழைக்கு பிறகு, சென்னையில் சற்று மழை அளவு குறைந்து வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மாலையில் மெரினா, மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது. சில நிமிடங்களே பெய்தாலும் பலத்த மழையாக இருந்ததால், சாலைகளில் நீர் தேங்கியது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
ஏற்கனவே நவம்பர் மாதம் பெய்த கனமழையின் போது, தியாகராயநகர் தத்தளித்தது. இதனால், மீண்டும் மழை வெள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி விடுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் சிலர் தங்களின் கார்களை ஜி.என் செட்டி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது நிறுத்திவைத்தனர்.
மேலும், சென்னை ஓஎம்ஆர் சாலை, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணியளவில் கனமழை பெய்தது. இதையடுத்து, சாலையில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.