ரஞ்சன் கோகாய்க்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம்
தொலைக்காட்சி நேர்காணலின் போது விருப்பப்பட்டால் நாடாளுமன்றம் செல்வேன் என்று கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அசாமை சேர்ந்த ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓராண்டு பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம் என்ற அடிப்படையில் ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அவை அலுவல்களில் சரியாக கலந்து கொள்வதில்லை என்ற புகார் எழுந்திருந்தது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரஞ்சன் கோகாய், ‘கொரோனா மற்றும் மருத்துவரின் அறிவுறுத்தல் காரணமாக 2 மாநிலங்களவை கூட்டத் தொடரில் நான் கலந்து கொள்ளவில்லை. நான் பங்கேற்று பேசவேண்டியது அவசியம் என்று, நான் எப்போது கருதுகிறேனோ அப்போது நான் மாநிலங்களவைக்கு செல்வேன். நான் குடியரசு தலைவரால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவன். எந்தக் கட்சியின் ஆதரவுடனும் நான் இந்த பொறுப்புக்கு வரவில்லை. மணி அடித்தால் கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்து விடுவார்கள். அதற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. என்னுடைய விருப்பப்படி நான் மாநிலங்களவைக்கு செல்கிறேன். நான் அவையின் சுதந்திரமான உறுப்பினர்.
ஊதியம் என்ற அடிப்படையில் பார்த்தால், நான் தீர்ப்பாயத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தால் எனக்கு கூடுதல் ஊதியம் கிடைத்திருக்கும். ஒரு பைசாக கூட நான் மாநிலங்களவையில் இருந்து கூடுதலாக பெறப் போவதில்லை’ என்று கூறியிருந்தார்.
அவரது பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தான் எந்தக் கட்சியின் உதவியுடனும் எம்.பி ஆகவில்லை, மணியடித்தால் கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்து விடுவார்கள் என்பது போன்ற அவரது கருத்துக்கள் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளன.
இந்நிலையில் ரஞ்சன் கோகாய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவைர உரிமை மீறல் தீர்மானத்தை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் மாநிலங்களவையில் கொண்டு வந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோகாய் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து, 6 முறை மட்டுமே அவை அலுவல்களில் பங்கேற்றுள்ளார். இன்றைக்கு 7-வது முறையாக கோகாய் அவைக்கு வந்துள்ளார். விதிப்படி, ஒவ்வொரு கூட்டத் தொடரின்போது உறுப்பினர்கள் ஒருநாளாவது அவைக்கு வரவேண்டும். அப்படி வராவிட்டால் விடுப்பு கடிதம் அளிக்க வேண்டும். இதற்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கும்.