உயர்கல்வியிலும் இராணுவத்தை உள்வாங்கப்போகின்றார்களா?
உயர்கல்வியில் இராணுவத்தினரை புகுத்தப் போகின்றார்களாக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயர்கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் இராணுவத்தை உள்வாங்கப் போகின்றார்களா?
இலங்கையின் கல்வித்துறையிலும் இராணுவத்தினரின் ஆதிக்கம் ஏற்படப்போகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அரச நிர்வாகத்துறையில் இராணுவம், சுகாதாரத்துறையில் இராணுவம், விவசாயத்துறையில் இராணுவம் உயர்கல்வித் துறையிலும் இராணுவமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.
ஜனநாய ரீதியில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு இது சிறந்த முன்னுதாரணம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராணுவ மோகம் கொண்டவர், இராணுவத்துக்கு முன்னுரிமை அளிப்பவர் என்பது படிப்படியாக வெளிப்படுகின்றது.
அரச நிர்வாகத்துறையில் இராணுவத்துக்குத்தான் இன்று முன்னுரிமை. சுகாதாரத்துறையில் இராணுவத்துக்குத்தான் முன்னுரிமை. விவசாயத்துறையிலும்கூட இராணுவத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று இன்று சுகாதாரத்துறைக்குப் பாரிய சவால். எனவே, இந்தச் சவாலை எதிர்கொள்ள கொரோனா தடுப்புச் செயலணியை அமைத்து இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கே செயலணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தச் செயலணியின் பிழையான முடிவுகள், காலதாமதத்தால் தடுப்பூசி கொண்டுவருவதில் இழுபறி நிலை காணப்பட்டது.
இதனால் 14 ஆயிரத்துக்கும் க்கும் அதிகமான இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், இன்று விசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவே பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
அரசு உர இறக்குமதியை ஒரு இரவில் தடைசெய்தமையே இதற்குக் காரணம்.
விவசாயத்துறையில் இருக்கின்ற உரப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைளையும் இராணுவத்திடம் கையளித்துள்ளனர்.
உர இறக்குமதியில் பாரிய குளறுபடிகள் இருக்கின்றன. அத்துடன் உர இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன” – என்றார்.