‘இலவச வீடு வழங்க யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன்’ : துரை முருகன்

அரசின் இலவச வீடு வழங்குவதற்கு யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை சிறையில் தள்ளவும் தயங்க மாட்டேன் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான துரை முருகன் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

வேலுார் மாவட்டம் காட்பாடி தாலுகா கீரைச்சாத்து பஞ்சாயத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், 36 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது-

வீடுகள் கட்ட ஏழை மக்களிடம் கொடுப்பதே 2 லட்சத்து 25 ஆயிரத்து 801 ரூபாய் மட்டும் தான். இந்த தொகை வைத்து வீடு கட்டவது சிரமம். அதிலும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் எப்படி எழை மக்கள் வீட்டினை கட்ட முடியும்?.

வீடு கட்டுபவர்களிடம் யாராவது 10ஆயிரம், 20 ஆயிரம் என பணம் கேட்டால் உடனடியாக என்னுடைய எண் 9585378888 க்கு தனிப்பட்ட செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்டது யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் செய்து சிறையில் அடைக்கவும் தயங்கமாட்டேன்.

முதலமைச்சர் நமது ஆட்சியில், யாரும் லஞ்சம் கொடுத்து ஒரு செயலை செய்து முடிக்கக்கூடாது என அடிக்கடி கூறுகிறார். அதன் படியே அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு துரை முருகன் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.