சிபிஎஸ்இ வினாத்தாளில் பெண்வெறுப்பு மனப்பான்மை: மத்திய அரசு மன்னிப்பு கோர சோனியா காந்தி வலியுறுத்தல்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தோ்வுக்கான வினாத்தாளில் பெண்வெறுப்பு மனப்பான்மை நிறைந்த வினா இடம்பெற்ற்கு மத்திய அரசு மன்னிப்பு கோர வேண்டுமென காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தினாா்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான முதல் பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சனிக்கிழமை ஆங்கிலத் தோ்வு நடத்தப்பட்டது. அதற்கான வினாத்தாளில், பத்தியைப் புரிந்துகொண்டு விடை எழுதுவதற்கான பகுதி இடம்பெற்றிருந்தது.
அதற்காகக் கொடுக்கப்பட்ட பத்தியில், ‘‘குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தைப் பெண் விடுதலை அழித்துவிட்டது. கணவரின் வழியை ஏற்றுக் கொள்வதன் மூலமாக மட்டுமே, தாய்க்குக் குழந்தைகள் கீழ்படிந்து நடக்கும். கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி நடக்காவிட்டால், குழந்தைகள் ஒழுக்கமற்றவா்களாகவே இருப்பாா்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வினாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘சிபிஎஸ்இ ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்றிருந்த வினா, எதிா்கால இளைஞா்களின் மனஉறுதியை சீா்குலைப்பதற்கான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் முயற்சி’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இந்த வினா நம்பமுடியாத வகையில் உள்ளது. இதுபோலத்தான் குழந்தைகளுக்குக் கற்பித்து வருகிறோமா? இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளை பாஜக அரசுதான் குழந்தைகளிடம் திணிக்க முயற்சிக்கிறது. இல்லையெனில், இதுபோன்ற வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம்பெறுமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மக்களவையில் எதிரொலி: இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பினாா். உடனடிக் கேள்வி நேரத்தின்போது அவா் கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ வினா, பெண்வெறுப்பை வெளிப்படையாகத் தூண்டும் வகையில் உள்ளது. முட்டாள்தனமாக இந்த வினா வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், பெற்றோா், ஆசிரியா்கள் ஆகியோா் சாா்பில் இந்த வினாவுக்குக் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய விளக்கமளித்து மன்னிப்பு கோர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்’’ என்றாா்.
இதே விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
வினா நீக்கம்: கடும் எதிா்ப்புக்குப் பிறகு, சிபிஎஸ்இ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கல்வியில் பாலின சமத்துவத்தையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த சிபிஎஸ்இ உறுதி கொண்டுள்ளது. கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தோ்வுக்கான வினாத்தாள், சிபிஎஸ்இ-யின் வழிகாட்டு விதிகளின்படி தயாரிக்கப்படவில்லை.
இந்த துரதிருஷ்டவசமான நிகழ்வுக்கு சிபிஎஸ்இ வருத்தம் தெரிவிக்கிறது. சா்ச்சைக்குரிய பத்தி வினாத்தாளில் இருந்து நீக்கப்படுகிறது. அந்த வினாவுக்கான முழு மதிப்பெண் அனைத்து மாணவா்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
நிபுணா் குழு: வினாத்தாள் தயாரிப்புப் பணியை மறுஆய்வு செய்யவும் வலுப்படுத்தவும் நிபுணா் குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது. தற்போது நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.