அரசிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு ரெலோவின் தலைவர் செல்வம் தகவல்.l
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் இரண்டாம் கட்ட கூட்டம் இம்மாதம் 12 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகளில் ஓரங்கமாக , அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவிடம் ஒருமித்தக் குரலில் கோரிக்கை விடுப்பதற்கும், அதற்கான ஆவணத்தை தயாரிப்பதற்கும் கடந்த நவம்பர் 2ஆம் திகதி யாழில் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் பேசும் கட்சிகளுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே செல்வம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஆளுந்தரப்பிலிருந்து 13 ஐ ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளாகும்.