சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? – குழப்பத்தில் ராஜபக்ச அரசு
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடும் விவகாரத்தில் இலங்கை அரசு ‘மதில் மேல் பூனை’ நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த வழியென அரசிலுள்ள ஒரு சிலரும், அவ்வாறானதொரு தேர்வுக்கு அரசு சென்றுவிடக்கூடாது என மற்றுமொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்ற முற்பட்டால் அது உள்நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்து, ஸ்தீரமற்ற தன்மையை உருவாக்கும் என்பதே, ‘வேண்டாம்’ என வலியுறுத்தும் தரப்பின் கருத்தாக உள்ளது.
ஆனால் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள்கூட இலங்கைக்குப் பாரிய தொகை கடன்களை வழங்குவதற்கு தயக்கம் காட்டும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே ஒரே வழி எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நெருக்கடி நிலை உருவாகும் எனவும் ‘வேண்டும்’ என வலியுறுத்தும் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஐ.எம்.எப். விவகாரம் பற்றி ஆராயப்பட்டது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் கடும் குழப்பத்தில் உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.