தொழிற்சாலைகளை அமைப்பதற்காக பிரதேச கைத்தொழில் பேட்டைகளில் காணிகளை ஒதுக்கி வழங்கல்….
பிரதேச தொழிற்சாலைகள் வேலைத்திட்டமானது, பிரதேச ரீதியாக கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியமான வேலைத்திட்டமாகும். குறித்த வேலைத்திட்டத்திற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங் காண்பதற்காக, 1990 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ‘பிரதேச கைத்தொழில் சேவைகள் குழு’ மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் ‘அமைச்சின் கருத்திட்டங்கள் மதிப்பீட்டுக் குழு’ கருத்திட்ட முன்மொழிவுகளின் முழுமையான மதிப்பீட்டின் பின்னர் மேற்கொள்ளப்படும்.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட குழுக்கள் மூலம் 27 கருத்திட்ட முன்மொழிவுகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக 15 கைத்தொழில் பேட்டைகளில் காணித் துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்களால் 4,523.34 மில்லியன் ரூபாய்களை முதலிடுவதற்கும் 2477 நேரடி வேலை வாய்ப்பு அவகாசங்களை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த முதலீட்டாளர்களுக்கு 35 வருடகால நீண்டகால குத்தகை அடிப்படையில் காணித்துண்டுகளை ஒதுக்கி வழங்குவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.