ஒமைக்ரான் எதிரொலி பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்காக அலைமோதும் மக்கள்!
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு லண்டனில் “தனியான விகிதத்தில்” பரவியுள்ளது. இந்த தொற்று தற்போது சுமார் 40% நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. இரட்டை தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், பூஸ்டர் டோஸ் தடுப்புசிகளை எடுக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், “இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்” என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் எதிரொலியாக தலைநகர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு பூஸ்டர் தடுப்பூசிகளுக்கான போராட்டமே நடைபெற்றது என்று சொல்லும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், “3-வதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் பாதிப்பு குறையும் என்று அறிவியல் உலகம் கூறுகின்றது. எனவே மக்கள் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்குள் இன்னொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ஒமைக்ரானுடன் நமது போராட்டம் தொடங்கி விட்டது. பூஸ்டர் டோஸ் போடாவிட்டால் ஒமைக்ரான் பாதித்தவர்களை மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
இங்கிலாந்தில் 2வது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அதை எடுத்துக் கொண்டு 3 மாத காலம் ஆகியிருக்க வேண்டும் அவர்களுக்குத்தான் பூஸ்டர் டோஸ்.
இங்கிலாந்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 54,661 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,73,468 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது கொரோனா பாதிப்புடன் 11,98,677 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.