நன்னீர் மற்றும் கடல் நீர்சார் உற்பத்தியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பில் நன்னீர் மற்றும் கடல் நீர்சார் உற்பத்தியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு 3.35 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தனினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சுயதொழில் ஆர்வம் காட்டும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களது வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் செயல்திட்டத்தில் நன்னீர் மற்றும் கடல்நீர்சார் உற்பத்திகளை மேம்படுத்தும் முகமாக இக்காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் கொடுவா மீன் வளர்ப்பிற்க்காக தெரிவு செய்யப்பட்ட 9 பயனாளிகளுக்கென முதல் கட்டமாக தலா 1,25,000 ரூபா பெறுமதியான காசோலைகளும், மீன் உணவு தயாரிப்பு மற்றும் வர்ண மீன் வளர்ப்பு போன்றவற்றிற்காக தெரிவுசெய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கென முதல்கட்டமாக தலா 1,25,000 ரூபா பெறுமதியான காசோலைகளும் ஏனைய நீரியல் சார் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கென முதல்கட்டமாக 50,000 ரூபா பெறுமதியான காசோலையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்த கருத்து வெளியிடுகையில் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான சுயபொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி அதனூடாக உள்ளூர் உற்பத்தியினை அதிகரித்து மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
இக்காசோலை வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் இணைத் தலைவரின் இணைப்பாளர் திருமதி. மங்களேஸ்வரி சங்கர் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இவற்றுக்கான இரண்டாங்கட்டக் கொடுப்பனவு இன்னும் இரு வாரங்களில் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.