அண்டார்டிகா – த்வைட்ஸ் பனிப்பாறை வேகமாக உருகுவதால் ஆபத்து.
அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான த்வைட்ஸ் பனிப்பாறையில் அடுத்த 05 முதல் 10 ஆண்டுகளுக்குள் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வெப்பநிலை அதிகரித்து வருவதால் த்வைட்ஸ் பனிப்பாறையின் முன்புறத்தில் ஒரு மிதக்கும் பகுதி ஒரு கார் கண்ணாடியைப் போல் சிதறக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
த்வைட்ஸ் பனிப்பாறை உருகும் விகிதம் குறித்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தற்போது தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்தப் பனிப்பாறை உருகி ஒவ்வொரு ஆண்டும் 50 பில்லியன் தொன் பனிக்கட்டிகளை கடலில் கொட்டுகிறது.
இது இன்று உலகளாவிய ரீதியில் கடல் மட்டத்தில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. எனினும் இந்தப் பனிப்பாறையில் கடல் மட்டத்தை 65 சென்டி மீற்றர் உயர்த்துவதற்கு போதுமான பனிக்கட்டி உள்ளது. இவை அனைத்தும் உருகினால் அது பெரும் ஆபத்தாக அமையும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இது உடனடிச் சாத்தியமில்லை. எனினும் புவி வெப்பமயமாதலால் அடுத்த சில நூற்றாண்டுகளில் இதனால் பனிப்பாறை வேகமாக உருகி கடல் மட்டம் உயரலாம் எனவும் ஆய்வுக் குழு கூறுகிறது.
எனினும் பனிப்பாறையின் முன்புறத்தில் விரைவில் வியத்தகு மாற்றம் ஏற்படப் போகிறது. அநேகமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு குறைவான காலப்பகுதியில் இந்த மாற்றம் நிகழ்லாம் என சர்வதேச த்வைட்ஸ் பனிப்பாறை ஒத்துழைப்புக்கான அமைப்பின் (ITGC) அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஒருங்கிணைப்பாளரான பனிப்பாறைகள் தொடர்பான ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெட் ஸ்கம்போஸ் கூறினார்.
த்வைட்ஸ் 120 கி.மீ. அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய நகரும் பனிப்பாறைகளில் ஒன்றாகும். இது தோராயமாக புளோரிடா மாகாணத்தின் அளவு கொண்டது.
த்வைட்ஸ் பனிப்பாறைக்கு அடியில் ஒரு முக்கிய இடத்தில் வெதுவெதுப்பான நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வெதுவெதுப்பான நீரானது த்வைட்ஸ் பனிப்பாறை உருகுதலுக்குக் காரணமாக இருக்கின்றது.
பனிப்பாறையின் தரைமட்ட மண்டலத்தில் நீரின் வெப்ப நிலையானது நீரின் உறைநிலையை விட இரண்டு டிகிரி அதிகமாக இருப்பதாகவும் முன்னைய ஆய்வுகளும் வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் வெதுவெதுப்பான நீர் இந்த பனிப்பாறையை மெது-மெதுவாக வலுவிழக்கச் செய்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அடுத்த 05 முதல் 10 ஆண்டுகளுக்குள் இந்தப் பனிப்பாறையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என தற்போது ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.