பத்திரிகையாளர்களை சந்திக்கும் கோலி…எதுக்கு, எப்போது தெரியுமா?
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி ஜனவரி 26ஆம் தேதிமுதல் தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி மும்பையில் நேற்றுமுதல் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கேப்டன் கோலி இன்னும் அணியில் இணையவில்லை. இன்று இரவு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தொடைப் பகுதி தசைப் பிடிப்பு காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கு முன்பு காயம் சரியாகவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கு முன்பும் கேப்டன்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வது வழக்கம். இந்திய டெஸ்ட் அணி நாளை மறுநாள் தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளதால், நாளை பகல் ஒரு மணிக்கு கேப்டன் கோலி பத்திரிகையாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஒருநாள் அணிக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, ரோஹித் ஷர்மா விலகியது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. மேலும், ஒருநாள் போட்டிகளின்போது கோலி ஓய்வுக்கு செல்லவுள்ளார் என வெளியான தகவல் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம். இதனால், நாளைய பத்திரிகையாளர் சந்திப்பு மிகமுக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.