மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு இன்றேல் அரசு வெடித்துச் சிதறுவது உறுதி!
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்த அரசு கட்டாயம் வெடித்துச் சிதறும் நிலைமை ஏற்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய அரசு வெடித்துச் சிதறாமல் இருப்பதற்கான பொறுப்பை பிரதான கட்சியே பொறுப்பேற்க வேண்டும். அரசு வெடித்துச் சிதறுவதும் சிதறாமல் இருப்பதும் பிரதான கட்சியின் தலைமையிலேயே உள்ளது.
ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு பிரதான கட்சியில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நாடு நல்ல நிலைமைக்குச் சென்றால் அரசு வெடித்துச் சிதறுவதற்கான நிலைமை ஏற்படாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் வெளியேற்றப்படக்கூடியவர்கள் அல்லர். கட்சியில் இருப்பவர்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று குறைபாடுகள் காணப்படும் இடங்களில் கட்சியின் சார்பில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்தனூடக பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் தலைமைப் பதவிகளிலேயே மாற்றங்கள் ஏற்படும். நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படாது. விசேட குழுக்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்க நேரிடும்.
பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை இதற்கு முன்பும் பல தடவைகள் இடம்பெற்றுள்ளன. பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு முழுமையாக உள்ளது” – என்றார்.