நெடுங்கேணியில் பெண் சுட்டுக்கொலை.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.
விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில் உணவருந்திவிட்டு செல்ல முடிவெடுத்து மீண்டும் வீடு நோக்கி செல்கையில் வீதியில் நீர் நிறைந்திருந்தமையால் தாயாரை வீதியில் இறக்கிவிட்டு நீர் நிறைந்திருந்த இடத்தை கடந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே மரணமடைந்துள்ளதாகவும் எதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்ததனால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் இந் நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்த பெண்ணின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுவதுடன் ஏற்கனவே கொலை குற்றத்துக்காக சிறையில் இருந்து வந்த ஒருவர் எனவும் தெரிவித்தனர்