அமேசான் நிறுவனத்தின் அணுகுமுறைக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கண்டனம்
இந்திய போட்டியியல் ஆணையத்துக்கு (Competition Commission of India) அங்கீகாரத்தை ரத்து செய்யும்அதிகாரம் இல்லை என்று அமேசான் நிறுவனம் கூறியுள்ளதற்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (The Confederation of All India Traders -CAIT) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குண்டூசி முதல் டூவீலர் வரை விற்பனை செய்யப்படும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படும் திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது.. இது தொடர்பாக அமேசான் இந்தியா ஆன்லைன் விற்பனை நிறுவன நிர்வாக இயக்குநர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமேசான் நிறுவனம் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஃப்யூச்சர் குரூப் மீது அமேசான் நிறுவனம் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை இந்திய போட்டியியல் ஆணையம் (Competition Commission of India -CCI) மறுஆய்வு செய்துவருகிறது.
இந்நிலையில், ஒப்புதலை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய போட்டியியல் ஆணையத்திற்கு இல்லை என அமேசான் நிறுவனம் தாக்கல் செய்த தகவலில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், CCIக்கு அதிகாரம் இல்லை என்று அமேசான் நினைத்தால் சிசிஐ விசாரணைக்கு அந்நிறுவனம் வந்திருக்க கூடாது.
ஆச்சரியப்படும் விதமாக, உச்ச நீதிமன்ற விசாரணை உட்பட எந்த நீதிமன்ற விசாரணையின்போது இந்த வாதத்தை அவர்கள் பயன்படுத்த வில்லை என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
அமேசான் ஆலோசகர்கள் CCI முன் சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது ஆதாரங்கள் எதையும் எதிர்க்க முடியவில்லை. எனவே, மேலும் ஆதாரம் தேவையில்லை என்பதால் ஒப்பந்தத்தை சிசிஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் CAIT வலியுறுத்தியுள்ளது.