ரங்கன ஹேரத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக மாறியிருந்த, இலங்கையின் முன்னாள் சுழல் நட்சத்திரமான ரங்கன ஹேரத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவ்வணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் ரங்கன ஹேரத்தும் நியூசிலாந்து பயணமாகியிருந்தார்.
இந்த நிலையில் ரங்கன ஹேரத்திற்கு இலேசான காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு, கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
ரங்கன ஹேரத்திற்கு கொவிட்-19 வைரஸ் ஏற்பட்டிருப்பதனை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) இற்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர், The Daily News செய்திச் சேவையிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேநேரம் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் எவருக்கும் கொவிட்-19 வைரஸிற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எனினும், முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு பங்களாதேஷ் அணியின் வீரர்களுக்கு மீண்டும் ஒரு தடவை கொவிட்-19 வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, இந்த பரிசோதனைகளின் நிறைவில் பங்களாதேஷ் அணி வீரர்கள் எவரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பார்களா? இல்லையா? என்பது தொடர்பில் கண்டறியப்படும்.
அதேநேரம் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான ரங்கன ஹேரத், தற்போது கிறைஸ்ட்சேர்ச் நகரில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் நியூசிலாந்து பயணமாகிய விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர்களான மொமினுல் ஹக், யாசிர் அலி, பஸ்லே ரப்பி, மற்றும் மெஹதி ஹஸன் மிராஸ் ஆகிய வீரர்களின் தனிமைப்படுத்தல் காலம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.