சில நாள்கள் சேர்ந்து வாழ்வதை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பாக கருது முடியாது: உயர் நீதிமன்றம்
வயதுவந்த இருவர், ஒரு சில நாள்கள் மட்டுமே சேர்ந்து வாழ்வதை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பாக கருது முடியாது என பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உண்மையான லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை நிரூபிக்க அவர்களின் மொட்டையான வாக்குமூலம் மட்டுமே போதாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஹரியாணா மாநிலம் யுமுனாநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது ஆணும் 18 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களின் விருப்பப்படி அப்பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, வீட்டிலிருந்து தப்பி ஓடியோடிய அப்பெண், தனது காலனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், தங்களுத்து எதிராக பொய்யான வழக்குகளை தொடுத்து அச்சுறுத்த முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், இருவரும் காதலித்து வருவதாகவும் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி மனோஜ் பஜாஜ், “அவர்கள் எத்தனை நாள்களாக உறவில் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளும் அதே சமயத்தில் ஒருவருக்கொருவர் தங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை எந்தளவுக்கு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில், இதுவும் திருமண உறவு போன்றதுதான்.
வயதுவந்த இருவர், ஒரு சில நாள்கள் மட்டுமே சேர்ந்து வாழ்வதால் அதை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பாக கருது முடியாது. உண்மையான லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை நிரூபிக்க அவர்களின் மொட்டையான வாக்குமூலம் மட்டுமே போதாது. 2021ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் தேதி முதல் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் மனுதாரர்களை சில குற்ற வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கக்கூடும் என மனுதாரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த அச்சம் தவறானது என நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரர்களுக்கு எதிராக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. சமூகம், கடந்த சில ஆண்டுகளாக, சமூக விழுமியங்களில் ஆழமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக, முழு சுதந்திரத்தை விரும்புவதில் அரிதாகவே ஆர்வமுள்ள இளைஞர்கள், அவர்கள் விரும்பும் நபருடன் வாழ, தங்கள் பெற்றோரின் சகவாசத்தை விட்டு வெளியேறுகிறார்கள். தங்களின் உறவுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு பெறுவதற்கு, அவர்கள் தங்கள் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர்” என்றார்.
பின்னர், மனுதாரர்களுக்கு 25,000 அபராதம் விதித்து, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.