இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் – கோலியின் விளக்கம் குறித்து சவுரவ் கங்குலி.
இந்திய அணியில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே விரிசல் இருந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது அது கங்குலிக்கும், கோலிக்கும் இடையே பிரச்சினையாக மாறிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம், கங்குலியின் பேட்டியும், விராட் கோலியின் விளக்கமும் தான். தற்போது இந்த விவகாரம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது, தாம் வேண்டாம் என்ற தடுத்ததாகவும், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20க்கு ஒரு கேப்டன் என்று இரண்டு பேர் இருக்க முடியாது என்பதால் தாங்களே கேப்டன் பதவியில் தொடர வேண்டும் என்று அவரிடம் கூறியதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
இந்த நிலையில், விராட் கோலியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு , என்னிடம் யாரும் அப்படி கூறவில்லை என்றும், எனது முடிவை பிசிசிஐயில் உள்ள அனைவரும் ஏற்று கொண்டதாக தெரிவித்தார். விராட் கோலியின் இந்த பதில், கங்குலிக்கு பெரும் சிக்கலை தந்தது. கங்குலி பொய் சொல்லிவிட்டதாக விராட் கோலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் விராட் கோலியின் கருத்து குறித்து கங்குலியிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு
கங்குலி, விராட் கோலியின் பேட்டி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கூறினாலும் அது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்து கொள்ளும், பிசிசிஐ தக்க நேரத்தில் பதில் சொல்லும் என்று கூறினார்.
பிசிசிஐ தலைவரே, பிசிசிஐ பதில் சொல்லும் என்று கூறியதால் ரசிகர்கள் முதலில் குழம்பினாலும், கோலி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என்பதை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறாரோ என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிலர், இந்த விவகாரத்தை முடிப்பதற்காகவே கங்குலி இப்படி லாவகமாக பதில் கூறி தப்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.