அரசு நிதியுதவிக்காக சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்
பொதுவாக திருமணம் செய்து கொள்ளும் புதுமணத் தம்பதியருக்கு, குடும்பம் நடத்த தேவையான அனைத்துப் பொருட்களையும் சீர்வரிசை என்ற பெயரில் பெண் வீட்டாரே வழங்கி விடுவார்கள். ஆனால், பொருளாதார ரீதியில் பின் தங்கிய பிரிவு ஏழை மக்கள் திருமணங்கள் செய்வது பெரும் சிரமத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பிரிவினர் திருமணத்துக்கு பின்னர் ஒவ்வொரு பொருளையும் சம்பாதித்து வாங்குவதற்கு தங்கள் எஞ்சிய காலத்தை செலவிட வேண்டும். இளம் பருவத்தில் மகிழ்ச்சியாக தொடங்கிட வேண்டிய திருமண வாழ்க்கை சுமையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள், திருமணம் செய்யும் போது அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இது தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் அமலில் இருந்து வருகிறது.
ஆனால், அரசு என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதில் எப்படி ஊழல் செய்ய முடியும் என கருதுவோர் பல்வேறு மோசடிகளை செய்து அரசை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் திருமண நலத்திட்ட உதவிகளை பெறும் நோக்கில் சொந்த சகோதரியையே ஒரு நபர் திருமணம் செய்த வினோத சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் துந்தலா பகுதியில் கடந்த டிசம்பர் 11ம் தேதி சமூக நலத்துறை சார்பில் முதல்வரின் திருமண உதவி திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் செய்துகொண்டோருக்கு அரசின் சார்பில் 35,000 ரூபாய் ரொக்கப் பணமும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகளை பெற்ற ஜோடிகள் குறித்த சரிபார்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது, இந்த திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட 51 ஜோடிகளில் ஒரு ஜோடி சகோதர – சகோதரி என்ற உண்மை கிராம மக்கள் வாயிலாக அதிகாரிகளுக்கு தெரிந்தது. இதனால் அதிகாரிகளும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசின் நலத்திட்டத்தை பெறும் நோக்கில் சகோதரியையே சகோதரர் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஜோடிகளின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு ஆளாவார்கள் என சமூக நலத்துறையினர் தெரிவித்தனர்.
விஷ்னு விஷால் – சூரி நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்திலும் கூட இது போல நடத்தப்படும் திருமணத்திற்காக சூரி செட் அப் திருமணம் ஒன்று செய்து கொண்டு சிக்கிக் கொள்வதாக இருக்கும். அந்த படத்தை நினைவுபடுத்துவது போல இச்சம்பவம் உள்ளது.