ஜப்னாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிளேடியேட்டர்ஸ்.
ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் (17) நடைபெற்ற LPL தொடரின் 19வது போட்டியில், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி வெற்றிபெற்றதுடன், முதல் குவாலிபையர் போட்டிக்கான தகுதியையும் பெற்றுக்கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி சாதகமான ஆரம்பத்தை பெற்றுக்கொள்ளவில்லை. முதல் ஓவரில் 9 ஓட்டங்களை பெற்றாலும், அடுத்த ஓவர்களில் ஓட்டவேகம் குறைந்ததுடன், விக்கெட்டுகளும் தொடர்ச்சியான இடைவேளைகளில் வீழ்த்தப்பட்டன.
ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் போட்டியை தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவர, வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்படும் தனுஷ்க குணதிலக்க மற்றும் பானுக ராஜபக்ஷ போன்ற துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறத்தொடங்கினர்.
குறிப்பாக, ஒவ்வொரு வீரர்களும் ஆரம்பத்தை பெற்றிருந்தாலும், அவர்களால் வேகமாகவும், அணிக்கு தேவையான முறையிலும் ஓட்டங்களை குவிக்க இயலவில்லை.
மொஹமட் ஹபீஸ் 15 ஓட்டங்களுடன் வெளியேற, பானுக ராஜபக்ஷ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இணைந்து ஓட்டங்களை பெறுவதற்கு முயற்சித்தனர். இருந்த போதும், பானுக 20 ஓட்டங்களுடனும், தனுஷ்க 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
மிகவும் குறைந்த ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவிக்க தடுமாறிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 120 ஓட்டங்களை கடக்குமா? என்ற நிலை இருந்த போதும், புலின தரங்க, செஹான் ஆராச்சிகே மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் இறுதி ஓவர்களில் சற்று வேகமாக துடுப்பெடுத்தாட கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜப்னா கிங்ஸ் அணியை பொருத்தவரை, வஹாப் ரியாஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுகளை சாய்த்த நிலையில், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு விஜயகாந்த் வியாஸ்காந்த் சவால் கொடுத்தார்.
அதன்படி, வியாஸ்காந்த், பிரவீன் ஜயவிக்ரம மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய ஜப்னா கிங்ஸ் அணி இந்த வெற்றியிலக்கை இலகுவாக அடைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த போதும், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு, இதனை பொய்யாக்கியிருந்தது.
ஆரம்பத்தில் மெதுவாக ஓட்டங்களை குவித்த போதும், ஓட்டங்களில் பாரிய வித்தியாசங்களை ஜப்னா கிங்ஸ் அணி கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, அவிஷ்க பெர்னாண்டோ, கெட்மோர் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதும், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சொஹைப் மலிக் மற்றும் குர்பாஸ் ஆகியோர் வலுவளித்தனர்.
பின்னர் சொஹைப் மலிக் மற்றும் திசர பெரேரா களத்தில் இருக்க, ஜப்னா கிங்ஸ் அணியால் வெற்றியினை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், ஆட்டம் நகர்ந்தது. இருப்பினும், கோல் அணிசார்பாக, நூர் அஹ்மட் வீசிய அணியின் 15வது ஓவரில் திசர பெரேரா மற்றும் சொஹைப் மலிக் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கோல் கிளேடியேட்டர்ஸ் பக்கம் போட்டி திரும்பியது.
எனினும், வாஹாப் ரியாஸ் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் அமீர் வீசிய 17வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி, 16 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்து புலின தரங்க வீசிய ஓவரில் வஹாப் ரியாஸ், அஷேன் பண்டார மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்க, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு இலகுவாகியது.
இறுதியாக ஜப்னா கிங்ஸ் அணியால், 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கோல் கிளேடியேட்டர்ஸ் சார்பாக, சமித் பட்டேல் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதேவேளை, இந்த போட்டியில் வெற்றிபெற்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து, முதலாவது குவாலிபையர் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஜப்னா கிங்ஸ் அணி, குவாலிபையர் போட்டிக்கான வாய்ப்பை
ஏற்கனவே தக்கவைத்திருந்த நிலையில், குவாலிபையரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
எனவே, அடுத்து நடைபெறவுள்ள கண்டி வொரியர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி, எலிமினேட்டர் போட்டியில், தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தது.