பகலிரவு டெஸ்ட்: 473 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி; இங்கிலாந்து சறுக்கல்.
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. லபுசாக்னே 95 ரன்களுடனும் ஸ்மித் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதையடுட்த்து இன்று ஆட்டம் தொடர்ந்தபோது 287 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் லபுசாக்னே. இதன்பிறகு ராபின்சன் பந்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ரூட் பந்தில் போல்ட் ஆனார். கேம்ரூன் கிரீனை 2 ரன்களில் வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். இதன்பிறகு ஸ்மித்தும் அலெக்ஸ் கேரியும் சிறப்பாக கூட்டணி அமைத்தார்கள். இதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் 107 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த கேரி, ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் நேசர் 35 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜை
ரிச்சர்ட்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி, 150.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கல் ரோரி பர்ஸ்ன், ஹாசீப் ஹமீத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்தது. கேப்டன் ரூட் 5 ரன்களுடனும், டேவிட் மாலன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.