ஜாமீன் அளிக்கும்போது விரிவான காரணங்களை கூற வேண்டிய அவசியம் நீதிமன்றங்களுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்
ஜாமீன் அளிக்கும்போது விரிவான காரணங்களைக் கூறவேண்டிய அவசியம் நீதிமன்றங்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிகாா் மாநிலம், பாட்னா உயா்நீதிமன்றம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஒருவருக்கு ஜாமீன் அளித்திருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தனிநபரின் சுதந்திரம் என்பது விலைமதிப்பற்ற உரிமை என்ற உண்மையை நீதிமன்றம் அறியும். அதேவேளையில், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையை நீதிமன்றங்களால் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான முதல்கட்ட விசாரணையின் முடிவு ஜாமீன் அளிப்பதற்கான காரணங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வழக்கு தொடா்பான முக்கிய உண்மைகள் கருத்தில் கொள்ளப்பட்ட பின்னா், ஜாமீன் மனு மீது முடிவு எடுக்க வேண்டும்.
ஜாமீன் மனு விசாரணையின்போது குற்றத்தின் தன்மையை எடுத்துரைக்கும் உண்மைகள், குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது ஏற்னெவே குற்ற வழக்குகள் உள்ளதா, குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு அளிக்கப்படவுள்ள தண்டனையின் தன்மை ஆகியவை மீது நீதிமன்றங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளையில், ஜாமீன் அளிப்பதற்கு விரிவான காரணங்களைக் கூற வேண்டிய அவசியம் நீதிமன்றங்களுக்கு இல்லை. குறிப்பாக வழக்கு விசாரணை முதல்கட்டத்தில் இருக்கும்போதும், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தாதபோதும் விரிவான காரணங்களைக் கூறவேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவித்தனா்.