மாற்றுத் திறனாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
உடல் குறைபாட்டை கிண்டல் செய்தவரை தாக்கி, மரணத்திற்கு காரணமான மாற்றுத் திறனாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் பாலகுரு ஒரு மாற்றுத் திறனாளியாவார். இவரை ஸ்டாலின் என்ற சிவராமகிருஷ்ணன் உடல் குறைபாட்டை சுட்டிக்காட்டி கிண்டல் செய்துள்ளார். இதனால் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த பாலகுரு கட்டை ஒன்றால் தாக்கியதில் படுகாயமடைந்த ஸ்டாலின் பின்னர் உயிரிழந்தார். இதுகுறித்து ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பாலகுருவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.டி.லட்சுமி ரமேஷ் முன்பு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பாலகுரு திட்டமிட்டு கொலை குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், திடீர் ஆத்திரம் காரணமாக குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.