பட்டுக்கோட்டையில் 6 மாத கைக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? குடும்பத்தினரிடம் விசாரணை

வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தினால், பிறந்த 6 மாத குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என தந்தை, மாந்தீரகவாதி உள்ளிட்ட ஏழு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் நசுருதீன் – ஹாஜிரா தம்பதிகள். இவர்களுக்கு 6மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தூக்கம் கலைந்த ஹாஜிரா கண்விழித்த போது தொட்டியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டு கத்தியுள்ளார்.

அப்போது அவரது கணவர், மாமியார் அனைவரும் ஆறு மாத குழந்தையை தேடிய போது வீட்டின் பின்புறம் மீன் வைக்கும் பெட்டியில் நீரில் மூழ்கியவாறு குழந்தை இறந்தது தெரியவந்தது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துபேசி மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் குழந்தையின் உடலைஅடக்கம் செய்து விட்டனர்.

இந்நிலையில் இந்த தகவல் அப்பகுதி தலையாரி சுதாகருக்கு தெரியவர உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்கு தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை தொடங்கினர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் உடலை தாசில்தார் மற்றும் DSP தலைமையில் தோண்டி எடுத்து மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து மீண்டும் அங்கேயே அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் குழந்தையின் தந்தையான நசுரூதீனின் சின்னம்மாவான ஷார்மிளா பேகத்தின் கணவர் அஸாருதீன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கேரளாவை பூர்வீகமாக கொண்டு தற்போது கட்மாங்குடியில் வசித்து வாரும் மாந்தீரகவாதியான முகமது சலீம் என்பவரை சந்தித்து குடும்ப கஷ்டங்களை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு 21 கோழிகளை உயிர் பலி கொடுக்க வேண்டும், அப்போதும் சரிவரவில்லையென்றால் உங்கள் வீட்டில் ஒருவரின் உயிரை கொடுக்க வேண்டும் என அவர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை நரபலி கொடுத்திருக்க வாய்புள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக குழந்தையின் தந்தை நசுரூதின், சின்னம்மா ஷார்மிளா பேகம், மாந்தீரகவாதி முகமது சலீம் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.