காஸ்ட்ரோவை ஆதரிக்கும் அமெரிக்கா : சுவிசிலிருந்து சண் தவராஜா
பிடல் காஸ்ட்ரோ மற்றும் ரவுல் காஸ்ட்ரோ ஆகியோரின பின்னால் புதிய காஸ்ட்ரோ ஒருவரின் பெயர் அரசியல் அரங்கில் தெரியத் தொடங்கியிருக்கின்றது.
சகோதரர்களான முன்னவர்கள் இருவரும் கியூபப் புரட்சியாளர்கள்.
இருவருமே கியூபாவின் அரச தலைவர்களாக விளங்கியவர்கள்.
பிடல் உயிரோடு இல்லை.
ரவுல் ஓய்வுபெற்ற நிலையில் தற்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
புதிய காஸ்ட்ரோவாக அறிமுகமாகின்றவரும் ஒரு அரசியல் தலைவரே.
ஹொன்டுராஸ் என்ற பெயரிலான மத்திய அமெரிக்க நாட்டின் முதலாவது பெண் அரச தலைவர் என்ற பெருமையுடன் யனவரி 27இல் பதவியேற்க உள்ள அவரின் பெயர் ஸியோமரா காஸ்ட்ரோ. 62 வயதான இவர் முன்னைநாள் அரசுத் தலைவரான மனுவேல் ஸெலயாவின் இணையர். நவம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் சுதந்திரம் மற்றும் மறுசீரமைப்புக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் 53 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
தென்னமெரிக்கப் பிராந்தியத்தைத் தனது கொல்லைப்புறம் எனக் கருதிச் செயற்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு வளையத்தினுள் உள்ள நாடுகளுள் ஒன்றே ஹொன்டுராஸ். 1903 முதல் 1925 வரையான 22 வருட கால இடைவெளியில் 7 தடவைகள் அமெரிக்கா இந்த நாட்டின் மீது படையெடுப்பு நடத்தியுள்ளது. அமெரிக்க வங்கிகள் மற்றும் ஐக்கிய பழ நிறுவனம் என்பவற்றின் நலன்களைப் பேணும் விதமாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளையும், மக்கள் எழுச்சிகளையும் ஒடுக்கும் நோக்குடனுமேயே இந்தப் படையெடுப்புகள் நிகழ்த்தப்பட்டன.
ஹொன்டுராஸில் தனது நிரந்தரப் படைத்தளத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, உள்நாட்டிலும், அயல் நாடுகளிலும் பல நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை ஒன்றும் இரகசியமான செய்தியல்ல. கொமயாகுவாவில் உள்ள சோற்றோ கனோ விமானத் தளத்தில் 500 முதல் 1,500 வரையான அமெரிக்கப் படையினர் தொடர்ச்சியாக நிலைகொண்டு வருகின்றனர். மத்திய அமெரிக்கப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய படைத்தளமாக இது கருதப்படுகின்றது.
சற்றொப்ப ஒரு கோடி சனத்தொகையைக் கொண்ட ஹொன்டுராசில் 60 விழுக்காடு மக்கள் வறுமையில் வாடுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2019இல் உலக வங்கி விடுத்த அறிக்கையொன்று, நாட்டு மக்களில் அரைவாசிப்பேரின் நாள் வருமானம் 5.50 டொலர் மாத்திரமே என்கிறது.
இதேவேளை, வறுமை மற்றும் வன்முறை என்பவற்றில் இருந்து தப்பி அமெரிக்காவை நோக்கிப் புலம்பெயரும் ஹொன்டுராஸ் மக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமானது. கடந்த 12 மாதங்களில் மட்டும் – ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, பல நாடுகளை ஊடறுத்து – அமெரிக்க எல்லையை அடைந்த ஹொன்டுராஸ் வாசிகளின் எண்ணிக்கை 330,000. இது மொத்த மக்கள் தொகையில் 23:1 விகிதமாக உள்ளது.
அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கடன்தொகை 17 பில்லியன் டொலர். இதில் 11 பில்லியன் வெளிநாட்டுக் கடனாக உள்ளது. ஊழல் மலிந்த நாட்டில் சட்டவிரோத கடத்தல் கும்பல்கள், ஆயுதக் கும்பல்கள், போதைப் பொருள் கும்பல்கள் என்பவற்றின் அட்டகாசம் அதிகம். ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் கொரோனாப் பெருந் தொற்றுக் காரணமாக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.
இத்தகைய பின்னணியிலேயே நவம்பர் 28 தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடப்பு அரசுத் தலைவரான யுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் போட்டியிடவில்லை. 2014இல் அரசுத் தலைவரான இவர் ஊழலுக்குப் பேர் போனவராக உள்ளார். அது மாத்திரமன்றி போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புள்ளவர் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றத்தில் தேடப்படும் குற்றவாளியாகவும் உள்ளார். இவரின் சொந்தச் சகோதரனான ரொனி ஹெர்னான்டஸ் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பின்னணியில் இவரது ஆதரவு பெற்ற நஸ்ரே அஸ்புரா தேர்தலில் போட்டியிட்டார். அவரது தோல்வியுடன் தேசியக் கட்சியின் 12 வருட ஆட்சி முடிவுக்கு வருகின்றது. 2017இல் யுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் இரண்டாவது தடவை வெற்றிபெற்ற தேர்தலில் மிகப் பாரிய ஊழல்கள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தன. அதேபோன்ற நிகழ்வுகள் இம்முறை தேர்தல்களின் போதும் நிகழலாம் என எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுவந்த நிலையில், அமெரிக்காவின் மேற்குப் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் பிரையன் நிக்கொலஸ் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஹொன்டுராஸ் சென்று யுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது, 2017 தேர்தல்களின் போது நடைபெற்ற மோசடிகள் இடம்பெற்க கூடாது எனக் கண்டிப்பாக எச்சரித்திருந்ததாகத் தெரிகின்றது.
2006இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மனுவேல் ஸெலயாவின் ஆட்சி 2009இல் அமெரிக்க ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவச் சதியில் கவிழ்க்கப்பட்டது. வெனிசுவேலா அரசுத் தலைவராக விளங்கிய ஹியூகோ சாவெஸ் உடனான அவரது தொடர்பே அமெரிக்காத் தலையீட்டில் ஆட்சி கவிழ்க்கப்படக் காரணம். என்றாலும், தற்போது அவரது இணையரின் தலைமையில் அமையும் ஆட்சியை அமெரிக்கா வரவேற்று அறிக்கை விடுத்திருப்பது பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
இடதுசாரிக் கொள்கைகளை உடைய ஸியோமரா காஸ்ட்ரோ தன்னை ஒரு ‘ஜனநாயக சோசலிசவாதி’ என்கிறார். இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவரும், ஹியூகோ சாவெஸின் நண்பராக விளங்கியவரும், தனது இணையருமான மனுவேல் ஸெலயாவே தனது ஆலோசகராக விளங்குவார் எனவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இருந்தும் அவரது ஆட்சிக்கு அமெரிக்கா ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது என்றால் எங்கேயோ இடிக்கிறதே என்கிறார்கள் நோக்கர்கள்.
உலகில் தாய்வான் என்றை நாட்டை அங்கீகரித்துள்ள நாடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வாறு அங்கீகரித்துள்ள 15 நாடுகளுள் ஹொன்டுராஸ{ம் ஒன்று. ‘ஒற்றைச் சீனா’ என்ற கொள்கைiயின் கீழ் சீன மக்கள் குடியரசை ஏற்றுக் கொண்டுள்ள நாடாயினும், சீனா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் தாய்வானை அமெரிக்க பாவித்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக தனது செல்வாக்கில் உள்ள நாடுகளின் மூலம் தாய்வானை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகின்றது. அவ்வாறு தாய்வானை அங்கீகரிக்கும் நாடுகளுக்கு பெருமளவு பொருளாதார உதவிகள் கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்தும் வருகின்றது.
நடைபெற்று முடிந்த தேர்தலின் முன்பாக ஹொன்டுராஸு க்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் மேற்குப் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் பிரையன் நிக்கொலஸ் தற்போதைய அரசுத் தலைவர் ஹெர்னான்டஸை மாத்திரமன்றி ஸியோமரா காஸ்ட்ரோ தரப்பிலும் சில சந்திப்புகளை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்போது, சீனாவை அங்கீகரிக்கும் முடிவை ஸியோமரா காஸ்ட்ரோ கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிகின்றது.
இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையிலான செய்தியொன்றை துணை அரசுத் தலைவராகத் தெரிவாகியுள்ள சல்வடோர் நஸ்ரல்லா கூறியுள்ளார். “தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போன்று தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டு, சீனாவுடன் உறவுகளைப் பேணும் முயற்சியில் உடனடியாக ஈடுபடப் போவதில்லை” என்பதாக அந்தச் செய்தி உள்ளது.
அமெரிக்காவின் இறுதிநேரத் தலையீடு இல்லாவிடில் ஸியோமரா காஸ்ட்ரோவின் தேர்தல் வெற்றி சாத்தியமாக ஆகியிராது என்பதே யதார்த்தமான உண்மை. யுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸின் ‘வல்லமை’ அத்தகையது. 2017 தேர்தலின்போதே அவர் அந்த ‘வல்லமை’யை நிரூபித்தும் இருந்தார். ஆகவே, தேர்தல் வெற்றிக்காக இந்தச் சமரசத்துக்கு ஸியோமரா காஸ்ட்ரோ இணங்கியிருக்கக் கூடும்.
இது தவிர, ஹொன்டுராஸில் ஒரு நிலையான ஆட்சி தற்காலிகமாகவேனும் இருக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. நாளாந்தம் எல்லையோரம் குவியும் புலம் பெயர்வோரைக் கட்டுப்படுத்த அது மிகவும் அவசியமாகின்றது.
ஸியோமரா காஸ்ட்ரோவைப் பொறுத்தவரை அவர் வழங்கிய வாக்குறுதிகளின் பட்டியல் நீளமானது. வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு, பெண் உரிமை, சிறந்த கல்வி வழங்கல், போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு, வன்முறைக் கும்பல்களைக் கட்டுப்படுத்துதல் எனப் பல விடயங்களில் அவர் முன்னுரிமை தரவேண்டி உள்ளது. அவற்றைச் செய்து முடிக்க அவர் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருக்க வேண்டும். குறைந்தது தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வரையிலான காலம் வரையாவது அமெரிக்காவின் தயவு தேவை என்பதே யதார்த்தம்.