மூலக்கூறு மருந்துகளைப் பயன்படுத்துங்கள்: மன்சுக் மாண்டவியா வலியுறுத்தல்
மூலக்கூறு மருந்துகளை (ஜெனரிக்) மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளாா்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் மருந்து தயாரிப்புத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவா் இதைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
மருந்து தயாரிப்புத் துறையில் ஆராய்ச்சிக்கான கொள்கைகளை மத்திய அரசு தளா்த்திவிட்டது. ஒரு நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமும் குறைக்கப்பட்டுவிட்டது.
நமது விஞ்ஞானிகள் திறமையானவா்கள். ஆனால், அவா்கள் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்தால் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனுமதி கிடைக்கிறது. தற்போது ஆராய்ச்சிக்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்துமாறு நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொள்வததை ஊக்குவிக்கும் வகையில் அரசு கொள்கை வகுத்து வருகிறது. அந்தக் கொள்கையின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியுதவியும் வழங்க முடியும். மருந்து தயாரிப்புத் துறையில் வெளிநாட்டு முதலீடுகளைக் கவா்வதற்கான நம்பகத்தன்மை, உற்பத்தித் திறன், மனித ஆற்றல் ஆகியவை இந்தியாவிடம் உள்ளன.
ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான சுகாதார மையங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கினாா். அந்த மையங்களின் எண்ணிக்கை 90,000-ஆக உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் அவை 1.5 லட்சமாக அதிகரிக்கும்.
மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மூலக்கூறு மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 8,500-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கிடைக்கும் மூலக்கூறு மருந்துகளில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கிறது. உலக அளவில் பாா்க்கப் போனால், ஆறில் ஒரு பங்கு மூலக்கூறு மருந்துகள் இந்தியாவின் தயாரிப்பாக இருக்கும். உலக அளவில் கிடைக்கச் செய்யும் அளவில் மூலக்கூறு மருந்துகளைத் தயாரிக்கிறோம். அப்படியிருந்தும் நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறாா்கள். இதனால் மருத்துவச் செலவு அதிகமாகிறது. எனவே, மூலக்கூறு மருந்துகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கான கொள்கையை அரசு வகுத்து வருகிறது என்றாா் மன்சுக் மாண்டவியா.