தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சீனா ஏன் மௌனம்? – சம்பந்தன் கேள்விக்கணை.
“போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர். ஆனால், சீனா இது தொடர்பில் இதுவரை அக்கறை செலுத்தவில்லை.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் ட்சீ சென்ஹோங் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு கடந்த சில தினங்களாக பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்தப் பயணம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கைக்கான எந்தவொரு தூதுவரும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்தையும் பார்வையிட முடியும். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. ஆனால், எம்மையும் எமது மக்களையும் பொறுத்த வரையில் சீனத் தூதுவரின் பயணம் முக்கியமானதல்ல.
எம்மைப் பொறுத்தவரையில் சீன நாட்டவரின் அடிப்படைக் கொள்கைகள் என்னவாக உள்ளன என்பதே எமது கேள்வியாகும்.
இலங்கையில் அரசியல் பிரச்சினைகள் பலமடைந்துள்ளன. சீனாவோ அல்லது சீனாவின் தூதுவரோ இனப்பிரச்சினை குறித்து அரசியல் தலைமைகளைச் சந்தித்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கவில்லை.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் சமத்துவத்தின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது குறித்து சீனத் தரப்பினர் எதனையும் கூறவில்லை. வடக்கு மாகாணத்துக்கு பயணம் செய்த சீனத் தூதுவரும் அங்கும் அவ்வாறான கருத்துக்களைக் கூறவில்லை.
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அரசியல் தீர்வு குறித்து முன்னேற்றகரமான கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர்.
சீனத் தூதுவரின் வடக்குக்கான வருகையை நாம் எதிர்க்கவில்லை. அதேவேளை, இந்தப் பயணம் குறிப்பிட்ட ஒரு சில நோக்கங்களுக்காக மட்டுமே அமைந்துள்ளது எனக் கருதுகின்றோம்.
இனப்பிரச்சினை விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு என்னவிதமாக உள்ளது என்பதே எமக்கு முக்கியம். இந்த விடயத்தில் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை” – என்றார்.