இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே நாட்டுக்கு எதிர்காலம் உண்டு!
“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்நாட்டுக்கு எதிர்காலம் உண்டு. இன ஐக்கியம் இல்லாவிட்டால் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி நோக்கி அழைத்துச்செல்ல முடியாது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்திக்கொள்வதற்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ், முஸ்லிம் மக்களுடன் நாம் எவ்வளவு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றோம் என்பதில்தான் இந்த நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. இன ஐக்கியம் இல்லாவிட்டால் எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது. 1956 இல் தனிச்சிங்கள மொழி சட்டம் கொண்டுவரப்பட்டு எமது நாட்டில் அழிவுக்கான பாதை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒரு மொழியென்றால் இரு நாடுகள், இரு மொழிகளென்றால் ஒரு நாடு என அன்றே கொல்வின் ஆர்.டி.சில்வா எடுத்துரைத்தார். அவர் கூறியது போன்று இங்கு நடந்தது.
சிங்கப்பூரின் தந்தையென போற்றப்படும் லீகுவான், முதலில் இன ஐக்கியத்தையே கட்டியெழுப்பினார். சிங்கப்பூரில் 75 வீதம் சீனர்கள் வாழ்ந்தாலும் மலேசிய மொழியில் தேசிய கீதம் எழுதப்பட்டது. இந்தியருக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டது. இப்படிதான் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்தி, இன ஐக்கியம் மூலம் சிங்கப்பூரை லீ குவான் கட்டியெழுப்பினார்.
ஆனால், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினர். அதனால்தான் நாடு முன்னேறவில்லை. எனவே, இனியாவது பொது இணக்கப்பாட்டுக்குவந்து பேச்சு நடத்தி, பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. இதனை நான் 70 முதல் வலியுறுத்தி வருகின்றேன். அதற்காகக் குண்டுத் தாக்குதலும் நடத்தினர். இன்றும் அதையே சொல்கின்றேன்” – என்றார்.