இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; கடுமையான கட்டுப்பாடுகள்.

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இங்கிலாந்தில் 5 லட்சத்து 13 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது கடந்த வாரம் பதிவான பாதிப்பு எண்ணிக்கையை விட 44 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவை வர இருப்பதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனை தவிர்க்க அரசு உடனடியாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா, இங்கிலாந்தில் அதிக அளவில் பதிவாகி வருகிறது. தற்போது பதிவாகும் பாதிப்புகளில் 60 சதவீதம் ஒமைக்ரான் வகை பாதிப்புகள் என தெரிவித்துள்ள இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி ஜாவிட், விரைவில் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

லண்டன் நகர மேயரும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து தெரிவித்திருப்பதால், இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.