மது விலை அதிரடி குறைப்பு : தமிழகத்திற்கு வந்து வாங்குவதை தடுக்க ஆந்திர அரசு நடவடிக்கை
டாஸ்மாக் நிறுவனம் மூலமாக தமிழகத்தில் மது விற்பனையை அரசு நடத்தி வருவதுபோல, ஆந்திர மாநிலத்தில், ஆந்திரப் பிரதேஷ் ஸ்டேட் பீவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏபிஎஸ்பிசிஎல்) நிறுவனம் மூலமாக மது விற்பனையை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், ஆந்திராவில் மதுவகைகளின் விலை 50 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இது மதுபிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திரா-தமிழக எல்லைகளில் இருக்கக்கூடிய ‘டாஸ்மாக்’ கடைகளில் ஆந்திர மதுபிரியர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆந்திரா எல்லையில் உள்ள திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள கடைகளில் வருமானமும் அதிகரித்தது.
தமிழகத்தில் வாங்கும் மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்யப்பட்டது. இது, ஆந்திரா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே தமிழகம் சென்று மதுவாங்கும் போக்கை தடுக்கும் நடவடிக்கைகளை ஆந்திரா மாநில அரசு மேற்கொண்டது.
இந்நிலையில், மதுவகைகளின் விற்பனை விலையில் அதாவது, எம்ஆர்பி-யில் இருந்து 20 சதவீதத்தை அதிரடியாக ஆந்திரா மாநில அரசு குறைத்துள்ளது. இதனால் ஆந்திராவில் இனி மது விற்பனை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் போக்கு குறையும் என்று அம்மாநில அரசு எதிர்பாக்கிறது.