அமேசான் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தல்

முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் உண்மையை மறைத்ததன் காரணமாக அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், 2019-ல் ரூ.200 மில்லியன் முதலீட்டில் பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை பெற்றது.
இதற்கிடையே, கடந்தாண்டு ஆகஸ்ட்டில், பியூச்சர் குரூப் நிறுவனம் தனது சில்லறை வர்த்தகம் தொடர்பான சொத்துக்களை 3.4 பில்லியன் டாலர்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமேசான் , தங்களது முதலீட்டு ஒப்பந்தத்தின்படி, பியூச்சர் குரூப் நிறுவனம், ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது என தெரிவித்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமேசானும், ரிலையன்சும் ஒன்றுக்கொன்று வழக்குகளை தொடர்ந்தன.
இவற்றை இந்திய காம்பெடிஷன் கமிஷன் அமைப்பு (சிசிஐ) விசாரணை நடத்தியது. இதில் அமேசான் நிறுவனம் முறைகேடு செய்தும், உண்மையை மறைத்தும் ஒப்பந்தம் மேற்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ. 202 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இது இந்திய வர்த்தக நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமேசான் நிறுவனம் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
அமேசானின் ஆதிக்கம் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான சிறு கடைகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதுதொடர்பாக அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு பல்வேறு வழக்குகளை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்நிலையில் அமேசான் மோசடி செய்து, தனது வர்த்தகத்தை உயர்த்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை அளித்தது, தகவல்களை மறைத்தது, மோசடி, பொருட்கள் பற்றிய தவறான தகவல்களை பதிவேற்றம் செய்தது போன்ற பல குற்றச் செயல்களை அமேசான் செய்துள்ளது. எனவே அமேசான் நிறுவனத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே சிசிஐ ரூ. 200 கோடிக்கு அமேசான் மீது அபராதம் விதித்துள்ளது. இது ஒன்றே, அந்த நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு போதுமானது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.