பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டுக் கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
ஒருநாள் ஆட்டங்கள் ராவல்பிண்டியிலும், டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இந்நிலையில் அடுத்த இரு வருடங்களில் பாகிஸ்தானுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது நியூசிலாந்து அணி. 2022-23இல் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
அதன்பிறகுக் கடந்த செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள், டி20 தொடர்களை 2023 ஏப்ரலில் விளையாடவுள்ளது. அப்போது 5 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் இரு அணிகளும் விளையாடவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மார்ச் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை பாகிஸ்தானில் 8 டெஸ்டுகள், 11 ஒருநாள், 13 டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்தத் தொடர்களில் பங்கேற்கின்றன.