மலேசியாவில் மழை வெள்ளம் காரணமாக 22 ஆயிரம் பேர் முகாமில் குடியேற்றம் !
மலேசியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் அதிகமான கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக சாலைகளில் நீர் தேங்கியது. மேலும் 6 இடங்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கு எடுத்து ஓடியது.
இதன்காரணமாக அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதையடுத்து சுமார் 22 ஆயிரம் பேர் வரை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தபட்டனர்.
குறிப்பாக நாட்டின் மிகவும் பணக்கார பகுதியான செலன்கூரில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவை தவிர பல்வேறு இடங்களில் சாலைகளிலும் மழை நீர் ஓடியுள்ளது. அதேபோல் மலேசியாவின் பஹாங் பகுதியிலும் சுமார் 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ள பாதிப்பு தொடர்பாக மலேசிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் அரசின் தகவலின் படி மத்திய பகுதியில் உள்ள 6 இடங்கள் மழை காரணமாக தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலாலம்பூர் பகுதியில் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வர்த்தக நகரமான கிளாங்கிலும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை தடைப்பட்டுள்ளது. வெள்ளதால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மலேசியாவில் எப்போதும் ஆண்டின் இறுதியில் பருவமழை தீவிரமாக பெய்யும். ஒரு சில இடங்களில் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்படும். அந்தவகையில் இந்தாண்டும் பருவமழை சற்று அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மக்களை வெளியேற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடைசியாக மலேசியாவில் 2014ஆம் ஆண்டு 1,18,000 மக்கள் தங்களுடைய வீடுகள் மற்றும் உடமைகளை விட்டு தவிக்கும் சூழல் ஏற்பட்டது.