கணவர்மார்களின் கடும் துன்புறுத்தலால் கொழும்பில் இவ்வருடம் 20 பெண்கள் தீ மூட்டி தற்கொலை!

“கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 குடும்பப் பெண்கள் உடலுக்குத் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.”

– இவ்வாறு கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். இவர்களில் 20 – 30 வயதுக்குட்பட்ட 19 பெண்கள் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்த 20 பெண்களும் திருமணமானவர்கள்.

கணவர்மார்களின் கடுமையான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் தாங்க முடியாத காரணத்தினாலேயே உடலுக்குத் தீ மூட்டி தற்கொலைக்குத் துணிந்துள்ளனர்.

இதற்கு முன்பு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருக்கவில்லை என்றும் 99 சதவீதமான பெண்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் உடலுக்குத் தீ மூட்டிக்கொண்டதன் பின்னர், தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இறுதி வரை அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

50 சதவீதமான எரிகாயங்களை உடையவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். இவ்வாறு உயிரிழந்த பெண்கள் அனைவரும் இறுதிவரை நிதானத்துடனேயே இருந்தார்கள்.

தோலுக்கு அடியில் உள்ள எண்ணெய் படலம், தீக்கு நல்ல ஊக்கியாக இருப்பதால், உடல் தீப்பிடிக்கும்போது, தீயை அணைப்பது பொதுவாக கடினமாக இருக்கும். அதனால்தான் ஓர் உடல் மரத்தை விட வேகமாகத் தீயில் எரியும் என்று கூறப்படுகின்றது.

எனவே, ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுமளவுக்கு அச்சுறுத்துவது அல்லது கொடுமைப்படுத்துவது மனித பண்பு அல்ல. அது பாரிய மனித உரிமை மீறலாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.