தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்டது என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
அதிமுகவை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், லாக்கர் சாவிகள், மடிக்கணினிகள், கணினி ஹார்டு டிஸ்க் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான தங்கமணி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்துவருகிறார். கடந்த அதிமுக ஆட்சியின்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக தங்கமணி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து,கடந்த 15ம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்றது. நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 23.05.16 முதல் 31.03.21 வரை தங்கமணி அமைச்சராக இருந்தபோது தன் பெயரிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் ரூ.4,85,72,019 சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்ப தகுந்த தகவலின் அடிப்படையில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக கடந்த 15ம் தேதி 70 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு கணக்கில் வராத பணம் மற்றும் சான்று பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று (20.12.21) 16 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் சான்று பொருட்களாக பல வங்கிகளின் பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.