நெடுஞ்சாலை ஹோட்டல்களில் உணவு தரமாக இல்லையென்றால் டெண்டர் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை
நெடுஞ்சாலைகளில் பேருந்துகளில் செல்லும் பொழுது உணவகங்களில் தரமான உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட வில்லை என்றால் உணவகங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை யில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கலை முன்னிட்டு சென்னையில் 5 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களுடன், போக்குவரத்து துறை கலந்து ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், இதில் போக்குவரத்து துறை காவல் துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
வெளியூர் பயண வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள் பயணிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கினாலும் அதிக விலைக்கு உணவுகளை விற்றாலும் உணவகங்களின் டெண்டர் ரத்து செய்யப்படும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்தார்.