யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால் பண்ணை சந்தியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் இரு குழுக்களுக்கிடையில் கடந்த 19ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பால் பண்ணை சந்தியில் உள்ள தனியார் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் இரவு விருந்தளித்ததை அடுத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் , மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.