ட்ரெய்லர் பார்வை: ராக்கி – தீவிர சினிமா ஆர்வலர்களுக்குத் தீனிபோடும் நல்வரவு!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா, ரோஹினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்துள்ள இப்படத்தின் முதல் ட்ரெய்லர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இப்படத்தின் இரண்டவது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“உன் அம்மா உன்னை ஏன் பெத்தா தெரியுமா?” என்ற கேள்வியுடன் “உள்ளத்தில் அரக்கன்… உயரத்தில் இறைவன்…” என ஆழமான கவிதை வரிகளுடன் தொடங்குகிறது ‘ராக்கி’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லர். வாழ்க்கையில் என்றும் இரண்டு பாதைகள். ஒன்று வெளிச்சமானது; இன்னொன்று இருள் சூழ்ந்தது. இங்கே கதையின் நாயகன் வேறு வழியின்றி இருள் சூழ்ந்த வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதாக நகர்கிறது ட்ரெய்லர்.
தற்கால உலகில் இறைவன், அரக்கன்… இருவரில் யார் ‘பெட்டர்’? – இந்தக் கேள்விக்கான விடைதேடி பயணிக்கும் அடர்த்தியான திரைக்கதையைக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது இந்த ட்ரெய்லர்.
காட்சிகள் அனைத்துமே ‘ரா’வாக இருக்கின்றன. தர்புகா சிவாவின் பின்னணி இசையும், ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் உருத்தாமல் மிரட்டுகின்றன. ‘ஆரண்ய காண்டம்’ தாக்கத்தை உணர முடிந்தாலும், கதையும் கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்கும் என்று நம்பும்படியே ட்ரெய்லர் அனுபவம் இருக்கிறது. வன்முறையும் ரத்தமும் அதிகம் இருக்கக் கூடும் என்பது காட்சிகள் மட்டுமின்றி வசனங்கள் மூலமாகவும் தோன்றுகிறது.
அடர்த்தியான காட்சிகள், சாதாரண மனிதர்களின் இருட்டான பக்கங்கள், இயல்பான ஒளியமைப்பு, நடிகர்களாக அல்லாமல் கதாபாத்திரங்களாகவே காணக் கூடிய வகையிலான தோற்றங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கதை சொல்லும் விதத்தில் இலக்கியத் தரம்… இவையெல்லாம் ‘ராக்கி’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லரின் சிறப்பு அம்சங்களாகப் பார்க்கலாம். இவை நிச்சயம் படம் மீதான எதிர்பார்ப்பை தீவிர சினிமா ஆர்வலர்களிடையே நிச்சயம் கூட்டும்.
‘தரமணி’ ஷூட்டிங் முடிந்த கையோடு கிளம்பி வந்தபடிதான் ட்ரெய்லரில் வசந்த் ரவி தெரிகிறார். ஆனாலும், படம் பார்க்கும்போது இந்தக் கணிப்பு பொய்த்துப் போகவும் வாய்ப்புண்டு. முக்கியக் கதாபாத்திரத்தில் மிரட்டும் பாரதிராஜாவும் இந்த ட்ரெய்லரில் ‘சர்ப்ரைஸ்’.
வழக்கமான மசாலா கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காட்சியமைப்புகள், மற்றும் டெக்னிக்கல் அம்சங்களுடன் ‘ராக்கி’ இருக்கும் என்பது மட்டும் உறுதி. கேமரா கோணங்கள், லைட்டிங் என அனைத்துமே உலகத் தரம். சரியாக 1.00 நிமிடத்தில் வரும் ஒரு ஷாட் ‘ஓல்டு பாய்’ கொரியப் படத்தின் புகழ்பெற்ற சண்டைக் காட்சியை நினைவூட்டுகிறது.
இத்தகைய எதிர்பார்ப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த ட்ரெய்லர் கொடுக்கும் தாக்கம் படத்தில் எதிரொலிக்கிறதா என்பதை வரும் டிசம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் தெரிந்து கொள்ளலாம்.