முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்ற திருவள்ளுவர் விழா!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் விழா இன்று(21) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலை அணிவித்ததைத் தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளால் மங்களவிளக்கேற்றப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் திருவள்ளுவருடன் தொடர்புடைய சிறப்புரை, திருக்குறள் கச்சேரி, பாவோதல், குறளோடு ஒரு குறள் எனும்தலைப்பிலமைந்த கவிதை முதலிய சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து திருவள்ளுவர் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், காட்டாவிநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.