அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த lankaQR வழிமுறை…..
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலியை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்று (21) கொட்டாவ இடைபரிமாற்ற மத்திய நிலையத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இந்த விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேஷன் ட்ரஸ்ட் வங்கிக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பின் அடிப்படையில் அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறும் போது கைகளினால் பணம் செலுத்துவதற்கு பதிலாக( Manual Toll Collection MTC) இந்த Lanka QR நடமாடும் கட்டணப் பயன்பாடு பயன்படுத்தப்படலாம்.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியானது இலங்கை மத்திய வங்கி, லங்கா கியூஆர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றை Frimi மூலம் இணைக்கிறது. இந்த Lanka QR நடமாடும் கொடுப்பனவு செயலியானது தற்போது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் மற்ற அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயன்படுத்தப்படும்.
Lanka QR செயலியைக் கொண்டுள்ள எவரும் இந்த மொபைல் செயலியைப் பயன்படுத்தி, அவர்களின் நெடுஞ்சாலைக் கட்டணத்தை பணம் செலுத்தாமல் செயலியை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், பயணத்தின் தொடக்கத்தில் பயணச்சீட்டை வெளியேறும் வாயிலில் சமர்ப்பித்து, பணம் செலுத்த Lanka QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதுமானது.
இந்த Lanka QR மொபைல் செயலியைப் பயன்படுத்துவது பணப் பயன்பாட்டைக் குறைக்கும், பணப்பயன்பாடு மூலம் கோவிட் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும், சமூகத்தை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்த்தும், மேலும் நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் அலுவலக நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.