“நீட்’ விலக்கு கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி
குளிர்கால கூட்டத்தொடர் முடிவை நெருங்கும் நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மக்களவையில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை போன்ற கட்சிகளும் லக்கீம்பூர் கெரி உள்ளிட்ட வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை காலையில் கேள்வி நேரம் தொடங்கியது. மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதில், “தமிழக அரசு கடந்த 2021, செப்டம்பர் 13}ஆம் தேதி அரசியல் சாசனத்தின் 200}ஆவது ஷரத்தின்படி “நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அந்தத் தீர்மானத்தை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு இதுவரை அனுப்பவில்லை. இது குறித்து விவாதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில், “கேள்வி நேரம் முக்கியம். ஜனநாயகத்தைப் பற்றி பேசும் எதிர்க்கட்சிகள் அவையின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடாது’ என்று கூறி, டி.ஆர். பாலு உள்ளிட்டவர்களை இருக்கையில்அமருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், திமுக உறுப்பினர்கள் நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகளுடன் அவையின் மையத்துக்கு வந்து கோஷமிட்டனர். தமிழக மாணவர்களுக்கு எதிராக இருக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும், மத்திய கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரினர்.
ஆனால், கேள்வி நேரத்தை மக்களவைத் தலைவர் தொடந்தார். அப்போது, திமுக உறுப்பினர்கள் அவை மையத்துக்கு வந்து, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனர்.
திமுக உள்ளிட்ட கட்சிகளின் இதுபோன்ற அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
பிற்பகலில், குழந்தை திருமணத் தடுப்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்னர் திமுக உறுப்பினர்கள் தமிழக அரசின் நீட் மசோதா குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடத் திட்டமிட்டனர். இது தொடர்பான அனைத்து திமுக உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை தயாரித்தனர். ஆனால், குடியரசுத் தலைவர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவர் திரும்பி வந்ததும் மனுவைஅளிக்க இருப்பதாக டி.ஆர் பாலு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.