‘உ.பி.யாக மாறுகிறது கர்நாடகம்’: மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்
கர்நாடக மாநிலம் அடுத்த உத்தரப் பிரதேசமாக மாறுவதாக மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் இன்று (டிச.22) நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், கிறிஸ்தவ மதத் தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். கட்டாய மதமாற்றம் செய்தால் தண்டனை விதிக்கும் பிரிவு இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அவசியமானது. கலாசார பின்னணியை மாற்றும் கவர்ச்சிகரமான முயற்சிகளுக்கு எதிராக இந்த சட்டம் முக்கியமானது என்று கூறினார்.
இந்நிலையில், கட்டாய மதமாமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது, நான் ஒரு பெண்ணாக இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். இதுபோன்ற சட்டங்கள் பெண்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. நான் யாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட உரிமை.
எனது தேவைகளை நான் தேர்வு செய்யும் வயதை நான் அடைந்துவிட்டேன். இந்த நாட்டில் மத உரிமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மதம் மாற வேண்டுமென்றால் ஒரு மாதத்துக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனக்கு என்ன தேவையோ அதை செய்வதற்கு தடையாக நிற்பது உரிமைமீறல் என்று கூறினார்.
மதமாற்ற தடைச் சட்டம் கூறுவதென்ன…
கட்டாய மதமாற்றம் செய்தால் தண்டனை விதிக்கும் பிரிவு இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், தாமாக முன்வந்து மதமாற்றம் செய்ய விரும்புவோா் 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்தால் மட்டுமே மதமாற்றம் செய்துகொள்ள முடியும். மதம் மாறுவோா் அதுவரை அனுபவித்து வந்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். ஆனால், புதிய மதத்திற்கான சலுகைகளைப் பெறலாம்.
மோசடி செய்து, வற்புறுத்தி, பொருளாசை காண்பித்து அல்லது திருமண ஆசை காட்டி ஒருவரை தவறாக வழிநடத்தி ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றம் செய்வது தடை செய்யப்படுகிறது.
சட்ட விதிகளுக்குப் புறம்பாக மதம் மாறினால் 3-5 ஆண்டுகள் சிறைவாசம், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்ட மசோதா வகை செய்கிறது. சிறுவா்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரை மதம் மாற்றினால் 3-10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதமாறத் தூண்டியவா், மதம் மாறியவருக்கு ரூ. 5 லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் சட்ட மசோதா வகை செய்கிறது.
கூட்டு மதமாற்றம் நடத்தப்பட்டால் 3-10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.