நான் பெரிது – நீ பெரிது என்ற வேறுபாடு வேண்டாம்! தலைவர்களிடம் சம்பந்தன் கோரிக்கை.
“தமிழ்பேசும் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஓரணியில் பயணிக்க வேண்டும். இந்தப் பயணத்தில் நான் பெரிது, நீ பெரிது என்ற வேறுபாடு இருக்கக்கூடாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்பேசும் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கொள்கைகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அனைத்துத் தமிழ்பேசும் கட்சிகளும் ஓரணியில் பயணிக்க வேண்டும். இது எனது நீண்ட நாள் ஆசை.
ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையில் – அதன் தலைவர்களுக்கிடையில் நான் பெரிது, நீ பெரிது என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. யார் தலைமை என்ற கேள்வியும் இருக்கக்கூடாது.
தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும்.
தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பங்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்படவுள்ள ஆவணம் மிகவும் காத்திரமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.
தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் என ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
அனைத்துத் தமிழ்பேசும் கட்சிகளின் இணக்கத்துடன் அதன் தலைவர்கள், இறுதிப்படுத்தும் ஆவணத்தில் ஒப்பங்களைக் கைச்சாத்திட்ட பின்னர் அதை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்க கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்பேசும் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்றார்.